Saturday, October 30, 2010

தேவர் ஜெயந்தியும் மக்கள் அவதியும்

சிங்கங்களே திரண்டு வாரீர் ! வாகன நெரிசலில் சென்னையை திணரடிப்போம் வாரீர் !

அக்டோபர் 30 தேவர் ஜெயந்தி வருவதற்கு முன்னமே ஜாதி அரசியல் தலைவர்களில் இருந்து நடிகர்கள் வரை சிங்கங்களே திரண்டு வாரீர் என்று அறைகூவல் விடுத்தாயிற்று . இது தெரியாமல் நான் தி. நகர் வழியாக சென்று வாகன நெரிசலில் மாட்டி கொண்டு பல மணிநேரங்களை மழை தூறலிலும் , சேறு சகதியிலும் டு வீலரை இன்ச் பை இன்ச் நகர்த்த வேண்டியதாயிற்று .

இந்த மாதத்தில் தேவர் பிறந்த நாளோடு தீபாவளி பண்டிகை விற்பனையும், வட கிழக்கு பருவ மழையும் வேறு சேர்ந்து கொண்டாகிவிட்டது . அப்புறம் கூட்டத்திற்கு சொல்ல வேண்டுமா என்ன ?

தேவர் நல்லவர்தான் ஆனால் ...
தேவர் அவர்களைப் பற்றிஎனக்கு அதிகம் தெரியாவிட்டாலும் அவர் தன் சொத்துகளை எல்லாம் ஏழை மக்களுக்காக எழுதி வைத்து விட்டதாக
கேள்வி பட்டுளேன் .

அதே போன்று தேவர் சமுகத்தில் இருப்பவர்கள் சமுதாயத்தில் எல்லா துறையிலும் , வியாபாரத்திலும் சிறப்புடன் இருப்பதை பார்த்துளேன் .
அப்படி மிகவும் சிறப்பாக விளங்கும் ஒரு சமுகம் , அடுத்தவர்கள் அவதிகளை குறித்து ஏன் கொஞ்சம் கூட அக்கறை இல்லாதவர்களாக இருக்கின்றார்கள் என்றுதான் தெரிய வில்லை.

குரு பூஜை செய்ய வேறு இடமே இல்லையா ?
சென்னையில் மிக முக்கியமான இடமான நந்தனம் சந்திப்பில் இருக்கும் தேவர் சிலைக்கு இப்படி ஆயிரம் கணக்கானவர்கள் கூட்டமாக வந்துதான் பூஜை செய்ய வேண்டுமா ?திருமண மண்டபம் போன்ற சவ்கரியமான இடத்தில் வைத்து கொள்ள கூடாதா? இப்போது கோவில் பூஜைகள் கூட மண்டபத்தில் வைத்து கொள்ளும்போது , குரு பூஜைகள் வைப்பதில் என்ன தவறு இருக்கிறது.


லட்ச கணக்கான மக்களுக்கு தொல்லை தரும் இந்த விதமான பூஜையை தேவர் கூட அனுமதித்து இருப்பாரா ? என்று தெரியவில்லை .

கூட்ட ஜனநாயகம்
கூட்டமாய் இருந்து கொண்டு என்ன செய்ததாலும் சரியே என்கிற உயர்ந்த ஜனநாயக கொள்கையை கடைபிடிக்கும் நம் நாட்டு அரசியலில் இப்போது தேர்தலும் நெருங்குவதால் , எந்த ஒரு கட்டு பாடும் இல்லாமல் இத்தகைய அராஜகம் அரங்கேறி கொண்டுதான் உள்ளது .

இதற்கு தேவர் ஜெயந்தி உட்பட எந்த தலைவர்களின் ஜெயந்தியும் விதிவிலக்கல்ல .

வெங்கட் நாராயணா சாலையிலிருந்து செல்லும் சாலையை வாகனங்கள் செல்ல அனுமதிக்காமல் போலீசார் தடுத்து விட்டதால் தான் இந்த நெரிசல்.


அதே சமயம் சைதாப்பேட்டை மார்க்கமாக நந்தனம் வந்த தேவர் ஜெயந்தி வாகனங்களுக்கு மட்டும் தற்காலிகமாக போடப்பட்டு இருந்த அந்த தடுப்பை போலீசாரே எடுத்து பவ்யமாக வழிவிட்டதை என்னை போன்ற ஏராளாம வண்டி ஓட்டிகள் வியப்புடன் பார்க்கத்தான் முடிந்தது .


அப்போது(ம் சளைக்காத) ஒரு இரு சக்கர வாகன ஓட்டுனர் , நாங்கள் எல்லாம் கொஞ்சம் ஒன் வேயில் வந்தால் பிடித்து கேட்பிங்க , இதல்லாம் கேட்க மாட்டிங்க என நின்று கொண்டிருந்த ஒரு போலீசிடம் கூற , அதற்கு அவர் கோபம் வருதா? போய் இறங்கி அடி உன்ன யாரும் கேட்க மாட்டோம் என்று கூற நாங்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டோம் .
போலீசார் பவ்யமாக எடுத்த அந்த தற்காலிக இரும்பு தடுப்பில் போட்டிருந்த வாசகம் OBEY TRAFFIC RULES .

எல்லாத்துக்கும் கருத்து சொல்லும் ஒரு காமடி நடிகர் அவர் நடிக்கும் படத்தில் இதுக்கும் கருத்து சொல்வாரா ?

(எங்க வீட்டுக்கு இன்று இரவு உருட்டு கட்டையுடன் குண்டர்கள் வருவார்களா ?)

...

Saturday, July 10, 2010

நன்றி கெட்டவர்கள்


ரோட்டில் பார்க்கும் எல்லா மரத்தின் பெயரையும் உங்களால் சொல்ல முடிந்தால் நீங்கள் ஒரு அறிவு ஜீவி என முதுகில் தட்டி கொள்ளலாம் .

மா மரம், கொய்யா , புளிய மரம் , ஆல மரம் ,அரச மரம் , வேப்ப மரம் என ஒரு சில மரங்களின் பெயர்களே எனக்கு தெரியும் என்பதால் நான் உங்களைப்போன்று அறிவு ஜீவி அல்ல . ஒரு சாதாரண ஜீவிதான் .

எல்லா மரங்களின் பெயரையும் தெரிந்து வைத்து கொள்ளும் அவசியம் எனக்கு இதுவரை வந்ததில்லை . ஆனால் நான் எந்த மரத்தை பற்றி எழுதுகிறேன் என்பதே தெரியாமல் எழுதி கொண்டு இருப்பதால் இப்போது அந்த அவசியம் வந்து இருக்கிறது .

அது ஒரு பெயரில்லாதா அல்லது பெயர் தெரியாத மரம் .
அரச மரத்தின் இலைகளைப்போன்றுதான் அதன் இலைகளும்.
ஆனால் பச்சை கொஞ்சம் அதிகம் .
அரச மரத்தின் இலை கிளிபச்சை என்றால் இதன் இலை கொஞ்சம் கரும் பச்சை .
அரச இலை இரண்டு பக்கமும் நன்கு வளைந்து அப்புறம் நன்கு குறுகி முடியும் . ஆனால் இந்த மரத்தின் இலை அரச இலையைவிட ஒரு முப்பது சதவிதம் குறைவாய் வளைந்து இருக்கும்.
இலை முடிவது அரச இலையை போலா ரொம்பவும் குறுகி முடிந்திருக்காது . கொஞ்சமே குறுகி காணப்படும் .

தி.நகரில் நான் வேலை செய்யும் நிறுவனம் இருக்கும் தெருவில் ஒரு ஐந்து வருடங்களாக இதை நான் பார்த்து கொண்டு இருக்கிறேன் .
ஆனால் இது என்ன மரம் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் எனக்கு வந்ததே இல்லை .

அந்த மரத்தின் நிழலில் நின்று எத்தனையோ முறை நண்பர்களிடம் பேசி கொண்டு இருந்திருக்கேன் .
அதன் நிழலில் எத்தனையோ முறை என்னுடைய பைக்கை நிறுத்தி வைத்து இருந்திருக்கின்றேன் .
ஆனால் ஒரு முறை கூட அந்த மரத்தை பற்றி நினைத்து பார்த்ததே இல்லை .

நான் மட்டும் இல்லை எத்தனையோ ஆயிர கணக்கானவர்கள் அந்த பெயர் தெரியாத மரத்தின் கீழ் இருந்து பேசி இருந்திருக்கின்றார்கள் .
வண்டியை நிறுத்தி இருக்கின்றார்கள் .
இரவில் அங்கு ஒரு கையேந்தி பவனையும் பார்த்து இருக்கின்றேன்.

இந்த மரத்தின் சேவையை பயன்படுத்தி கொண்டது நான் மட்டும் அல்ல.
அதற்கு பின்னால் உருவான ஒரு பல மாடி கட்டிடமும் தான்.
அந்த கட்டிடம் கட்ட பட்ட போது அதற்கு தேவைப்படும் கம்பிகளை வெட்டியதும் இந்த மரத்தின் நிழலில்தான் .
கட்டிட வேலை செய்பவர்கள் ஓய்வாய் உட்கார்ந்து இருந்ததும் இந்த மரத்தின் நிழலில்தான் .
கட்டிடம் கட்டுபவரின் கப்பல் போன்ற கார் நின்றதும் இந்த மரத்தின் நிழலில்தான்.

இன்று அந்த கட்டிடம் பல மாடிகளோடு எழும்பி நிற்கிறது .
அந்த கட்டிட உரிமையாளர் கம்பீரமாய் அதனை பார்த்து கொண்டு இருக்கின்றார் .

ஆனால் அந்த பெயரில்லாத மரமோ இப்போது வெட்டப்பட்டு கிடக்கின்றது .
கட்டிடத்தின் அழகை கெடுக்கிறது என்று .


.....முற்றும் .

Friday, February 5, 2010

தாக்ரே குடும்பத்தை என்கவுண்டரில் போட்டு தாக்க வேண்டும்


ஒரு மூணு தாதாக்கள் மும்பையையே கலக்கி கொண்டு இருக்கின்றார்கள் அங்கு இருக்கும் அரசாங்கத்தின் கைகளோ பூ பறித்து கொண்டு இருக்கிறது . என்ன கொடும சார் இது .

பால் தாக்கரே , உத்தவ் தாக்கரே , ராஜ் தாக்கரே என்கிற தாதாக்களின் தொல்லை மும்பை வாசிகளை பாடாய் படுத்தி எடுக்கிறது .

கட்சி தொண்டர்கள் என்று குண்டர்களை வைத்துகொண்டு யாரை வேண்டுமானாலும் தாக்குவது அவர்கள் சொல்வதைத்தான் அந்த மாநிலம் கேட்க வேண்டும் என்று அராஜகம் செய்வது என ஒரு எல்லையே இல்லாமல் நடந்து கொள்ளும் இந்த குடும்பத்தை தட்டி கேட்க ஒரு ஆண் மகன் இல்லை அங்கு.

மகாராஷ்ட்ரம் மரத்தியற்கே என்று சொல்லும் இந்த அராஜக அறிவு ஜீவிகள் ஆஸ்த்ரேலியாவில் இன வெறி தாக்குதல் நடப்பதால் ஐ பி யல் கிரிக்கெட் தொடருக்கு ஆஸ்த்ரேலிய வீரர்கள் பங்கு பெற விடமாட்டோம் என கூக்குரல் இடுகிறார்கள் . ஆஸ்த்ரேலியாவில் நடப்பது இன வெறி தாக்குதல் என்றால் மகாராஷ்ட்ராவில் இருக்கும் மற்ற மாநிலத்தவர்கள் மீது இவர்கள் நடத்தும் தாக்குதல் மட்டும் என்ன தேச ஒற்றுமை தாக்குதலா ?

என்ன ஒரு ஆச்சரியம் என்றால் இவர்கள் என்ன செய்தாலும் கையை கட்டி வேடிக்கை பார்க்கும் தூமை அரசாங்கமாக ஒரு அரசு நடை பெறுவதுதான் . பால் தாக்ரே அன் கோ வின் சிவா சேனா ராஜ் தாக்ரேவின் எம் என் எஸ் தான் அங்கு உண்மையான அரசாங்கமாக செயல்பட்டு வருவது கவலை அளிக்கும் விஷயம் .

வட மாநில மக்களுக்கு மத ரீதியான உணர்வுகள் இருப்பதினால்தான் இதை போன்ற குண்டர்கள் ஒரு அரசாங்கத்தை அசைத்து பார்க்க முடிகிறது . தமிழ் நாட்டில் பெரியார் மத உணர்வுக்கு மிகப்பெரிய கடிவாளம் போட்டதை போன்று அங்கு யாரும் தோன்றாததுதான் அந்த மக்களின் மிகப் பெரிய குறை பாடே .

பொது மக்களுக்கு தொல்லை கொடுக்கும் ரவுடிகளை என்கவுண்டரில் போட்டு தள்ளுவது வழக்கம் .அதைப் போன்று நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் இவர்களை போன்ற குண்டர்களை என்கவுண்டரில் போட்டு தள்ளுவது நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நலன் பயக்கும் .


இன்னும்
போட்டு தள்ள வேண்டிய சில லிஸ்டுகள்


பாராளு மன்றத்தை தாக்க உதவிய அப்சல் குரு.
தெலுங்கானா லொள்ளு சந்திர சேகர்
பாக். தீவிரவாதி அஜ்மல் கேசாப்

....

Wednesday, February 3, 2010

எனக்கும் கவிதை எழுத ஆசை

வினை விதைத்தவன் வினை அறுப்பான்
திணை விதைத்தவன் திணை அறுப்பான்
கவிதையை விதைத்தவன் எதை அறுப்பான் ?
கழுத்தை .

இந்த கவிதையை என்னுடைய பள்ளிகூட நாட்களில் படித்தது .

எனக்கும்

ரோட்டில் ஒருவன் போய் கொண்டிருந்தான்
அவன் வயிறு ஒட்டி
கண்களும் உள்ளபோய்
எலும்புகள் மட்டும் மூடப்பட்டிருந்தது
தோல்களால்
நான் ஏதாவது கொடுக்க நினைத்தேன்
என் கையிலும் காசு இல்லை
மனது ஈர மாகியது
அதோ தூர தெரியும் காய்ந்த பனை மரங்களாய்
நாங்கள் இருவரும் .

என்பதை போன்ற புரிந்தும் புரியாத கவிதைகளை எழுதி உங்களையும் குழப்பி நானும் குழம்ப ஆசைதான் . விதி யாரை விட்டது .

என்னுடைய சிறு வயதில் கவிதை எழுதுவதும் , படிப்பதும் மிகவும் பிடித்த மான விஷயங்களாக இருந்தது . ஐந்தாவது படிக்கும் போது "எங்க விட்டு பாப்பா அழுவாத பாப்பா தூங்காத பாப்பா" என்பதை போன்று கவிதை எழுதியது உண்டு .

கல்லூரி இதழில்"
செந்தமிழ் தாயே உன்னை
சிறப்பு மிகு சீராட்டி
வனப்பு மிகு வாழ வைக்க ஆசைதான்
ஆனால் ஆசை மிகு வாழ்க்கை நான் வாழ
ஆங்கில மனைவி எனக்கு தேவை
ஆதலால்
மன்னிப்பாய இந்த
மானங்கெட்ட தமிழ் மகனை "

என்றும் கிறுக்கியது உண்டு . பிறகு 1995 ல் பாக்கியா வார இதழில் வரதட்சணையை பற்றி நான்எழுதிய
"விலைமகன் " கவிதை என்னுடைய போட்டோவுடன் வந்ததும் என்னுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை .(அதற்கான பரிசு தொகையான ரூ 101 இன்னும் வந்து சேரவில்லை ) இந்த உலகிலே நான்தான் மிகப்பெரிய கவிப் பேரரசு என்பதாய் நினைத்து கொண்டிருந்தேன் . ஆனால் நாளாக நாளாக வார இதழ்களில் கவிதையாக வருபவற்றை படித்ததில் கவிதை மேல் இருந்த ஆர்வம் போயே விட்டது . தவிர கவிதை எழுதுபவர்கள் என்றால் தாடி வைத்து ஜோல்னா பை மாட்டுபவர்கள் என்கிற எண்ணமும் கவிதை அலர்ஜியை உண்டாக்கியது .

ஆனால் இப்போது பவர்களின் பதிவுகளில் வரும் கவிதைகளை படிக்கும் போது எனக்கு திரும்பவும் கவிதையின் மீது ஒரு ஈர்ப்பு உண்டாகியுள்ளது .

நன்றி கவிதை பதிவர்களே.

ஸோ இனிமேல் நானும் கவித கவித என்று புலம்பலாம் .

....

Monday, February 1, 2010

தெலுங்கானா மாநிலம் தேவையா ?அறுபது வருடங்களுக்கு மேலாக இருந்து வருகிறது இந்த தெலுங்கானா பிரச்சனை மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டாலும் அந்த மொழிகளுக்குள்ளே இப்போது பிரிவினை உண்டாகி தனி இனங்களாக தனி கலாசாரம் உடையவர்களாக தங்களை பிரித்து கொண்டு நாட்டையும் பிரிவினைக்குள்ளாக அழைத்து செல்கின்றனர்.

இந்தியா ஒரு நாடாக இல்லாத போது ஒரு சில பேரரசர்களே இந்தியா முழுமைக்கும் வெற்றி கொண்டு ஆட்சி நடத்தி கொண்டு இருந்தனர் . அப்படியும் அவர்கள் இருந்த இடத்தை தவிர மற்ற இடங்கள் எல்லாம் தான் கைப்பற்றிய வேறு நாடாகத்தான் அந்த மன்னன் நினைத்தான் . அந்த பேரரசனின் மறைவிற்கு பிறகு அவன் கைப்பற்றிய பகுதிகள் எல்லாம் பெரும்பாலும் தனி நாடாகத்தான் இருந்தன. ஒரு சில ராஜ்யங்கள் பெரிய ராஜாக்களுக்கு கப்பம் கட்டியும் தவிர போர் வரும் போது அவனுக்கு படை உதவி செய்தும் ( ஒரு வேலை எந்த ஒரு சூழ்ச்சியும் நடைபெறாத போது ) வந்தன.

பிரிட்டிஷ் ஆட்சி இங்கு ஏற்பட்டதன் விளைவாகத்தான் இந்தியா என்கிற ஒரு நாடு உருவானது . பிறகு மொழிவாரி மாநிலங்கள் உருவாயின. மாநிலம் என்பது
ஒரு குறுப்பிட்ட அளவிற்கு பெரியதாக இருப்பதுதான் அந்த மாநிலத்திற்கு நல்லது . இல்லாவிட்டால் அங்கு ஜனநாயகம் என்பது இல்லாமல் போய் அது ஒரு குடும்பத்தின் சொத்தாக ஆகும் அவலம் ஏற்படும். ஒரு மாநிலத்தில் பல்வேறு விதமான கலாச்சாரத்தை சேர்ந்த மக்கள் இருப்பதுதான் ஆட்சி மாறி மாறி வர துணை புரியும் .

தமிழகம் ஒரு பெரிய மாநிலமாக இருந்தாலும் ஆட்சி பலத்தில் ஒரு குடும்பம் அரசியல் , ஊடகம் , சினிமா , தொழில் என எல்லாத்திலும் ஆதிக்கம் செழித்தி வருவது தவிர்க்க முடிய வில்லை . சிறுபான்மை அரசாக இருப்பதிற்கே இந்த நிலை என்றால் ... பிறகு புரிந்து கொள்ளுங்கள் .

குட்டி குட்டி மாநிலங்கள் உருவாக உருவாக குறுநில மன்னர்கள் உருவாவது தடுக்க முடியாது. எல்லா முன்னேற்ற கழகங்களும் கம்பெனிகளாக மாறி வரும் சுழலில் இது நாட்டிற்கு நல்லது இல்லை என்பது தான் உண்மை.

தெலுங்கானா சந்திர சேகர் தனி மாநிலம் கிடைத்ததும் முதலில் முதல்வர் ஆவார் பிறகு அவர் குடும்பமே வழி வழியாக அந்த மாநிலத்தை ஆளும் தகுதி பெரும் . இப்போது போராட்டம் நடத்தும் பொதுமக்களுக்கு பிறகு எந்த வித்தியாசமும் தெரியபோவதில்லை . அந்த மாநிலத்தின் பெயரும் லோகோவும் மாறி இருப்பதை தவிர . இப்போதாவது ஒரு ஆட்சி போனால் மற்றோண்டிற்கு வாய்ப்பு இருக்கலாம் . ஆனால் பிறகு அதுவும் கிடைக்கிறதா என்பது சந்தேகமே. குட்டி மாநிலங்கள் மத்திய அரசிடம் பல நேரங்களில் மல்லு கட்ட வேண்டி வரலாம் .

மாநிலத்தில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக ஒரு பிரிவினர் நினைத்தால் அதற்காக போராடலாம் ஆனால் அதற்காக இப்படியே ஒவ்வொரு மாநிலத்தையும் பிரித்து கொண்டே போனால் இரண்டு விஷயங்கள் உண்மையாகலாம்.

ஒன்று : இந்தியர்களுக்கு தங்களை ஆண்டு கொள்ள தெரியாது என்ற
வெள்ளை காரனின் வாதம் .

மற்றொண்டு : இந்தியாவை சிறு சிறு நாடாக உடைக்க வேண்டும் என்று
வெப்சைட்டில் எழுதி வரும் சீனர்களின் கனவு .

........

Saturday, January 30, 2010

இந்தியாவின் செல்லபிள்ளை - பாக்கிஸ்தான்


நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் ஆனால் நீ செய்தால் அவ்வளவுதான் என்று வீட்டின் கடை குட்டி அடிக்கும் லூட்டி தான் பாக்கிஸ்தான் இப்போது அடித்து கொண்டு இருக்கிறது.

26/11 தீவீரவாத தாக்குதலுக்கு இன்னமும் உருப்படியாய் ஒரு நடவடிக்கையும் எடுக்காத பாகிஸ்தான் அரசியல் பபூன்கள் ,
ஐ . பி. எல் -லில் பாக்கிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுக்காமல் இந்தியா புறக்கணித்துவிட்டது என்று கண்ணீர் வடிக்கின்றனர் .

நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்கள் செத்து மடிந்த விஷயம் அவர்களுக்கு பெரிதாக தெரியவில்லை . ஆனால் தங்கள் நாட்டு கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவில் போனி ஆகவில்லை என்று மட்டும் கூப்பாடு போடுகின்றனர். அதற்கு ஷாருக்கான் போன்றவர்களின் சப்பை கட்டு வேறு. இதில் அரசாங்கத்திற்கு சம்பந்தம் இல்லை என்று சொல்லும் உள்துறை அமைச்சர் சிதம்பரம் பாக். வீரகளை சேர்த்து கொண்டிருக்கவேண்டும் என்று கூறியுள்ளார் .அரசாங்கத்தின் தலையீடு இல்லை என்று கூறும்போது அதைப்பற்றி கருத்து மட்டும் ஏன் கூறவேண்டும்.

உடனே நார்த் இந்தியாவின் கேமரா நீதிமன்றங்களான மீடியாக்கள் இதனை ஒரு விஷயமாக எடுத்துகொண்டு பார்க்கும் ஆட்களிடம் எல்லாம் கருத்து கேட்கின்றனர்.

இந்தியாவில் நடக்கும் ஒரு விளையாட்டு நிகழ்ச்சியில் வெளி நாட்டு வீரர்களை சேர்த்து கொள்வதும் , கொள்ளாமல் இருப்பதும் நமது தனிப்பட்ட உரிமை . அதை கேள்வி கேட்க அடுத்த நாட்டிற்கு எந்த வித உரிமையும் இல்லை . குறிப்பாக பாகிஸ்தானிற்கு கொஞ்சம் கூட அறுகதை இல்லை.

இந்தியாவில் தீவீரவாத செயல்களை கட்டவிழ்த்து விடும் நாடாகவும் , இந்தியாவிற்கு செக் வைப்பதற்காக சீனாவிற்கு உதவி செய்து வரும் நாடாகவும் இருந்து கொண்டு இப்படி உரிமையையும் கேட்கிறது பாக்கிஸ்தான் . அதற்கு பொறுப்பாக பதில் சொல்லி கொண்டு இருக்கிறது இந்தியா .

லண்டனில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரோஷியை தான் சந்திக்க ஆவலாக இருப்பதாக எஸ் . எம். கிருஷ்ணா சொல்கிறார் உடனே குரோஷி தான் சந்திக்க போவதில்லை என்கிறார் . இப்போது கிருஷ்ணா பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தால் தான் பேச்சு வார்த்தை என்கிறார். ஏன் இந்த முரண்பாடு நம் அமைச்சரிடம்.

ஒருவேளை இந்தியாவின் ஆட்சியாளர் மனதில் ஐ நா சபையில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கிடைக்கிற வரையில் இப்படிதான் நயந்து போக வேண்டும் என நினைப்பிருந்தால் அது ஒரு தவறான அரசியல் தந்திரமாகத்தான் இருக்கும்.

சென்ற ஆண்டு அணு ஆயுத பரவல் தடுப்பு சட்டத்தில் இருந்து இந்தியாவிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்கிற ஐ நா சபை விவாதத்தில் சீனாவின் ஆதரவை கோர சிங் சீன பிரதமர் வெண் ஜியாபோவிற்கு போன் போடா அவர் எடுக்கவே இல்லை . ஆனால் அதற்காக சீனாவின் உறவையா முறித்து கொண்டோம். மாறாக உலக வெப்பமயமாதல் கொபன்கேகம் மாநாட்டில் சீனாவோடு இந்தியா ஒத்துழைத்தது .


அதே போல் பாகிஸ்தானை இந்தியா மிக எச்சரிக்கையோடு கையாளாமல் அதனை ஒரு செல்ல பிள்ளையாக நடத்தி வந்தால் ஒருநாள் மிகப்பெரிய அழிவை சந்தித்து நொந்து கொள்ளவேண்டி வரலாம்.

....

Thursday, January 21, 2010

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் - தேர்தல் நாடகமா ?


புலித்தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்கிற செய்தி உண்மையிலேயே தமிழ் சமுதாய மக்களுக்கு ஒரு இனிப்பான செய்திதான் . ஆனால் இலங்கையில் தேர்தல் வரும் இந்த சமயத்தல் திடிரென ஒரு வெப் சைட் முளைத்து அதில் புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் தக்கசமயத்தில் மக்கள் முன் தோன்றி பேசுவார் என்று கூற காரணம் என்ன? அப்படியே இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு செயலையும் மிக துல்லியமாக நேரம் பார்த்து செய்யும் புலிகளுக்கு , தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில் தங்கள் தலைவர் உயிரோடு இருக்கிறார் என்கிற இந்த செய்தி ராஜ பக்சே மீண்டும் (சிங்கள மக்களின் உணர்ச்சிகளை தூண்டி) வெற்றி பெற துணை போகும் என்று தெரியாதா ?

சில
மாதங்களுக்கு முன்பு கம்யுனிச அமைப்பொன்று இன்னும் போர் முடியவில்லை . இனி எங்களின் போர் ராஜ தந்திர வழியில் இருக்கும் என்று கூறியதை போன்று தான் இதுவுமா என தெரிய வில்லை .

சென்னையில் எங்களை போன்றவர்களுக்கு இலங்கை அரசியலின் உண்மை நிலவரம் தெரிய வில்லை ஒரு வேளை பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்கிற செய்தி தேர்தலில் ராஜபக்செவிற்கு மரண அடியாக இருக்குமா என்றும் தெரியவில்லை .

எது எப்படியோ பிரபாகரன் அந்த சிங்களவர் கையில் மாட்டி சாக வில்லை
உயிரோடு தான் இருக்கிறார் என்றால் அது மிக சந்தோசமான விசயம்தான் .

கொசுறு செய்தி :
ராஜபக்செவின் அரசாங்க சோதிடர் ராஜ தேவேந்திரன் இந்த தேர்தலில் அராஜபக்சே கண்டிப்பாக ஜெயிப்பார் என்று கூறி உள்ளார்.

...

Tuesday, January 19, 2010

பின்னூட்ட பகவானே போற்றி !

நாம என்னதான் பிரிச்சி மேஞ்சி எழுதினாலும் அதற்கு பின்னூட்டம் வராவிட்டால் . ? என்ன செய்வது ? என்று  இனி குழம்பி கொண்டு இருக்க வேண்டாம் .

அதற்குதான் நம் முன்னோர்கள் அந்த காலத்திலேய அதற்கு வழியும் கண்டு பிடித்து உள்ளனர் . திருநெல்வேலிலிருந்து 30  கிலோ மீட்டர் தொலைவில்  இருக்கும் பின்னூட்ட புரத்தின் நாயகர் தான் பின்னூட்ட பகவன் . முப்பது நாள் விரதமிருந்து தினமும் கலையில் எழுந்ததும் பின்னூட்ட பகவன் போற்றி மந்திரம் சொல்லி வர ,பிளாகில் பின்னூட்டம் வந்து குவிய ஆரம்பிக்கும் . விரதத்தை பின்நூட்டபுரத்திற்கு வந்து தான் முடிக்க வேண்டி இருக்கும்.

உங்கள் நலன் கருதி இந்த அறிவிப்பு வெளியிடுவது பின்னூட்ட பகவான் பீடம் .

நம்ம கேப்டன் விஜயகாந்திற்கும், அர்னால்ட் ஸ்வாஷ்நெகர்ருக்கும் சண்டை - புதுப்படம்
(இந்திய  வலை தள வரலாற்றிலேய முதன் முதலாக இன்னமும் எடுத்து முடிக்காத படம் உங்களுக்காக ...)

நேத்து வந்த ஜெயம் ரவிஎல்லாம் ஹாலிவுட் நடிகர்களோடு சண்டை போட்டு நாட்டை காப்பாத்தும் போது கேப்டன் மட்டும் சும்மாவா , தனது அடுத்த படத்திற்கு இந்தியாவில் (தீவீரவாதிகளே) வில்லன்களே இல்லாததால்  அமெரிக்கா தீவீரவாதிகளிடம் இருந்து இந்தியாவை காப்பாத்தும் பொறுப்பை ஏற்றுள்ளார் .

எத்தனை காலத்திற்குத்தான் பாகிஸ்தான் தீவீராவாதிகளையே அடித்து தள்ளுவது , (உதைத்து என்று படிக்கவும்) கையில் துப்பாக்கி இருந்தும்.

இந்தமுறை என்னிடம் அடி, சாரி  உதை   வாங்க அர்னல்டுதான் வேண்டும் என்று கேப்டன் அடம் பிடிக்க வேறு வழி இல்லாமல் தயாரிப்பாளரும் தலையில் துண்டை போட்டு கொண்டு அர்னால்டின் கால்ஷீட் வாங்க படம் ஆரம்பிக்கிறது .

படத்தின் கிளைமாக்சில் அர்னால்ட் பெரிய ஆலமர சைசில் துப்பாக்கியை வைத்துகொண்டு கேப்டனை சுடுகிறார் . கேப்டன் லேசாக விலகிக்கொள்ள அது பின்னால் சென்று அங்கு இருக்கும் ஒரு பைப்பை தாக்குகிறது அதிலிருந்து வரும் புகையில் யாருக்கும் கண்ணு மண்ணு தெரியவில்லை ஒரு வழியாக  புகைமூட்டம் களைந்து பார்த்தால் ,அர்னால்டின்  கையில் கேப்டனின் தங்கை , தங்கையின் கையில் ஒரு வயது குழந்தை , அந்த ஒருவயது குழந்தையின் கையில் ஒரு சிரிக்கும் குழந்தை பொம்மை .

இப்போது அர்னால் படு பயங்கராமாக சிரிக்கின்றார் என்ன   
வருங்கால முதல்வரே !  (படத்தில் கேப்டனின் பெயர் ) இப்ப என்ன செய்ய போற கொஞ்சம் அசஞ்சாலும் உன்னோட தங்கச்சி உயிர் அவ்வளவுதான் . மரியாதையா அந்த அணு குண்டு சம்பந்த பட்ட பைல கொடுத்திடு என்கிறார் .

கேப்டன் தன்னுடைய செவ்விழிகளை உருட்டி பார்க்கிறார் . தன் தங்கையை பார்கிறார் . தங்கையின் கையில் இருக்கும் குழந்தையை பார்க்கிறார் , குழந்தையின் கையில் இருக்கும் பொம்மையை  பார்க்கிறார் .இன்டர் கட் ஷாட்டில் கேப்டன் சிறுவயதில் தன் தங்கைக்கு அவள் அழுவதை நிறுத்த ஒரு புது பொம்மையை வாங்கி கொடுக்கிறார் . அந்த பொம்மையை தான்  இப்போது அவளின் குழந்தை  கையில் வைத்து
இருக்கின்றது . என்னதான் தன் பேச்சை கேட்காமல் அவள் வில்லனை காதலித்து கல்யாணம் செய்துகொண்டாலும் மாமவின் சீதனமான அந்த பொம்மையை மறக்க வில்லை . அதை நினைத்து கண் கலங்கி தங்கையை பார்க்கிறார் . தங்கையும் அதை புரிந்து கொண்டவளாக தலையை ஆம் என்று ஆட்டுகிறாள்.

யோவ்! எவ்வளவு நேரம்தான் பொறுத்து இருக்கிறது ஒரு கையில இவ்வளவு  பெரிய துப்பாக்கி இன்னொரு கையில உன்னோட தங்கச்சி வலி தாங்க முடியலையா  . சீக்கிரம் கொடுயா .. அந்த பைல .-இது அர்னால்ட் .

கேப்டன் இப்போது ஆரம்பிக்கிறார் .நான் கொடுக்க மாட்டேன் இது காந்தி பிறந்த தேசம் , நேரு வாழ்ந்த தேசம் , இந்திர காந்தி வாழ்ந்த தேசம் , ராஜீவ் காந்தி வாழ்ந்த தேசம்  சோனியா காந்தி வாழ்ற தேசம் ,ராகுல் காந்தி வாழ்ற தேசம் .. இந்த தேசத்துல பிறந்த ஒரு உண்மை தமிழன் உயிர்கூட தருவான் ஆனா அணுகுண்டு ரகசியத்த மட்டும் தரமாட்டன் .

இந்தியாவுல இருபத்து ஒன்பது மாநிலம் இருக்கு ,இப்ப முப்பதாவுதா தெலுங்கானா வரப்போகுது . ஒவ்வொரு மாநிலத்திலும் நாப்பது மாவட்டம் இருக்குது ,அந்த நாப்பது மாவட்டத்திலும் நானூறு கிராமங்க இருக்குது ,ஒவ்வொரு கிராமத்திலும் ரெண்டு குக்கிராமம் இருக்குது . இந்த கிராமத்துள .....பேசிக்கொண்டே திரும்பி பாக்கிறார் அர்நால்ட்  துப்பாக்கியை போட்டு விட்டு தங்கையை விட்டு விட்டு ஓடுகிறார் வேகமாக . விடுவாரா கேப்டன் துரத்துகிறார் .

ஒரு பாழடைந்த கட்டிடத்தினுள் ஓடுகிறார் . கேப்டனும் உள்ளே செல்ல அர்னால்ட் சட்டையை  கழட்டுகிறார்  . கேப்டனும் "மொழ மொழ எம்மா" என்கிற தன்னுடைய உடம்பை காட்ட பனியனுடன் நிற்கிறார் . சண்டை ஆரம்பத்தில் அர்நால்ட் சுழட்டி சுழட்டி அடிக்கிறார் . வாயில் ரத்தம் கக்க கேப்டன் கீழே விழுகிறார் .

இப்போது இந்தியாவே கதறுகிறது . இந்திய ஆர்மி ,நேவி , ஏர் போர்ஸ் தளபதிகளும் கமான் கேப்டன் , கமான் கேப்டன் என்கிறார்கள்  . கண்ணை திறக்கிறார் கண்ணில் அப்படியே மன்மோகன் , சோனியா  வந்து போகிறார்கள் இந்திய தேச வரைப்படம் வந்து போகிறது கூட்டணி கூட்டணி என்கிற வார்த்தை பேக் கிரவுண்டில் கேட்கிறது . இப்போது பல்டி அடித்து எழுந்திருக்கிறார்  கேப்டன் . அர்னால்டை துவம்சம்  செய்கிறார் . இந்தியாவை காப்பாற்றுகிறார்  . மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் கத்துகின்றனர் ,
வருங்கால முதல்வரே , வாழ்க !!

...சுபம்
இந்த படத்தை பற்றிய விமரிசனங்கள் வரவேற்கப்படுகின்றன .தவிர இந்த படத்தை தியேட்டரில் திரையிட உள்நாடு, வெளிநாடு விநியோகிஸ்தர்களும் தேவை .

அடுத்த முறை சீனாவின் ஆக்கிரமிப்பிலிருந்து இந்தியாவை காப்பாற்ற 
ஜாக்கி சானோடு மோதுகிறார் நம் கேப்டன் ....

Wednesday, January 13, 2010

சன் பிக்சர்ஸ் படங்களை நான் டி வி டி யில் தான் பார்ப்பேன்-payapulla


திரைத்துறையை  சேர்ந்த என் நண்பர் ஒருவரிடம் நான் பேசி கொண்டிருந்த போது அவரிடம் என்ன வேட்டை காரன் படம் பார்த்தீர்களா எப்படி இருந்தது ? என்றேன் .

தனிப்பட்ட முறையில் வேட்டைகாரன் எனக்கு புடிக்காவிட்டாலும் சினிமாவை சேர்ந்தவர் ஆயிற்றே அவர் பார்வை எப்படி இருக்கிறது என்கிற ஆவல்தான் .

ஆனால் அவர் பார்க்கவில்லை என்றார் .
எனக்கு ஆச்சரியம் .புதுமுகங்களின் படங்களை கூட
பார்த்துவிடுபவர் ,வேட்டைகாரனை இந்நேரம் பார்த்து இருப்பார் என்றே நினைத்தேன் .

பொதுவாகா இவரைப்போல் துணை இயக்குனர்களாக இருப்பவர்கள் தங்கள் தொழிலின் தற்போதைய நிலவரத்தை அறிந்து கொள்ள ,வரும் எல்லா படங்களையும் பார்ப்பது வழக்கம் . அதற்கு இவரும் விதிவிலக்கல்ல . ஆனால் இந்த படத்தை பார்க்காததற்கு அவர் சொன்ன காரணம் எனக்கும் ஓரளவிற்கு சரி என்று தான் பட்டது .

அதாகப்பட்டது திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தங்களுக்குள் எடுத்த முடிவின் படி திரைப்பட விளம்பரங்களுக்கு  ஒரு கட்டு பாட்டை வைத்துள்ளது . அதன் படி எத்தனை பெரிய தயாரிப்பாளர் ஆனாலும் அவர் தன்னுடைய திரைப்படத்திற்கு செய்தி தாளில் கொடுக்கும் விளம்பரத்தின் அளவு முதல் வாரத்திற்கு இந்த அளவு அடுத்த வாரங்களுக்கு இந்த அளவு என்று வரை படுத்தி அதன் படி தான் விளம்பரம் கொடுத்து வருகின்றனர்.

அதாவது முதல் வாரத்தில் குவாட்டர் பேஜ் கொடுத்தால் வரும் வாரங்களில் பத்துக்கு பதினைந்து சென்டிமீட்டர் அளவுகளில் தான் விளம்பரம் கொடுக்க முடியும் .இது எல்லோருக்கும் பொருந்தும் . இதன் மூலம் அதிக விளம்பரம் கொடுத்துவிட்டு படம் ஊத்தி கொண்டால் பத்திரிகை நிறுவனங்களுக்கு பணம் கொடுக்காமல் இருப்பது தடுக்கப்பட்டது . தவிர சின்ன பெரிய தயாரிப்பாளர்களுக்கு  இடையே  விளம்பரம் செய்வதில் இருந்த இடைவெளி  குறைக்கப்பட்டது  .

ஆனால் சன் பிக்சர்ஸ் வந்ததும் என்னவாயிற்று  அவர்கள் எடுக்கும் படங்களுக்கு தங்கள் சேனலில் மகா பயங்கரமாக விளம்பரம் கொடுத்து பின்னி எடுக்கின்றனர் . இதனால் சின்ன தயாரிப்பாளர்கள் விளம்பர விஷயத்தில் மிகவும்
பாதிக்கப்படுகின்றனர் . அவர்களால் சன் சேனலில் அவர்கள் சொல்லும்
யானை விலை ,குதிரை விலைக்கு . விளம்பரம் செய்ய முடியுமா ? செய்தால் தான் கட்டு படி யாகுமா ? சன் பிக்சர்சால்   தமிழ் திரை உலகம் ஓட்டு மொத்தமாக பாதிக்க பட ஆரம்பித்து உள்ளது .

இந்த செய்தியை சொன்னவரிடம்  நீங்கள் படம் பார்க்கா  விட்டால் அவர்களுக்கு என்ன கோடி கணக்கிலா நஷ்டம் வந்து விடபோகிறதா  ? என்றேன் .

  நான் படங்களை பார்க்க மாட்டேன்  என்று சொல்லவில்லை  சன் பிக்சர்சின்  படங்களை  இனி டிவிடி இல்தான் பார்க்க  வேண்டும் என முடிவு செய்துள்ளேன் இது நான் எதிர்ப்பை காட்டும் வெளிப்பாடு என்றார்

அடப்பாவி உள்ளுக்குள்ள ஒரு எரிமலையே வெச்சிருக்காரே என்று நினைத்து கொண்டு ஏன் டிவிடி இன்னும் கிடைக்க வில்லையா என்றேன் . கொஞ்சம் பொறுத்திருந்தால் கண்ணில் ஒற்றி கொள்ளும் அளவிற்கு பாரின்  பிரின்ட் கிடைக்கும் என்றார்.

நல்ல தெளிவாதான்ய இருக்காங்க .

...

Tuesday, January 12, 2010

மனசுக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது

நானும் ரொம்ப நாளாக நம் வலைதளத்தை பார்த்து கொண்டுதான் வருகிறேன். நம் பதிவர்களுக்குள் ஒரு சண்டையும் காணோம் . எல்லோரும்  ஆக்க பூர்வமாகவே பதிவை எழுதி கொண்டு வருவதை பார்த்தால் , நாம் தமிழர்கள் தானா  என்று தோன்றுகிறது. ஒரு சக்திவேல் நான் விடை பெறுகிறேன் என்று ஓடி போனார் .

அடுத்து என்ன ஒரு கார சாரமே இல்லாமல் தமிழ்மண பதிவுகள் போய்கொண்டு இருக்கிறது .வாங்க சார் சண்ட போடலாம் . நீங்க எதாவது எழுதுங்க நான் பதில் எழுதறேன் . நாம கீபோர்டில் சண்டை போடலாம் .

எல்லாரும்  பாருங்க நானும் ரவுடிதான் .


நல்ல பிளாகர் , கெட்ட பிளாகர் , குசும்பர்கள் , உள்நாட்டவர் , வெளிநாட்டில் இருப்பவர்கள் , அடுத்தவரை சில்மிஷம் பண்ணுபவர்கள் புது பிளாகர்கள் பழைய பிளாகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள் .

...

Thursday, January 7, 2010

சிங்களவர்களின் ஆதிக்கம் சென்னையிலும் - ஒரு சம்பவம் .

நான் சமீபத்தில் பெங்களூரு போகலாம் என்று ஒரு ஆம்னி பேருந்தில் டிக்கெட் புக் பண்ணி இருந்தேன் . பயணம் செய்யும் அன்று வண்டியில் ஏறினால் வண்டியின் முதல் வரிசை தொடங்கி ஒரு எட்டு வரிசையில் காட்டு மிராண்டிகளை போன்ற ஒரு கும்பல் உட்கார்ந்து காச் மூச் என் பேசி கொண்டிருந்தது.

வண்டியில் ஏறும்போதே ஒருவன் எதிரில் தொடையின் பெரும் பகுதி தெரிய அரை டவுசர் போட்டு கொண்டும் தான் போட்டிருந்த டி ஷர்டை நெஞ்சு வரைக்கும் தூக்கி விட்டும் தொப்புளை காட்டி உட்கார்ந்து கொண்டிருந்தான் .

என்னுடைய சீட்டான ஐந்தாம் எண் சீட்டும் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது . என்னுடைய சீட்டில் ஒரு குண்டு கொழுக்கட்டையாக ஒருவனும் இன்னொரு வனும் உட்கார்ந்து இருந்தனர் . இது என்னுடைய சீட்டு என்று சொல்லியும் கேட்காமல் உட்கார்ந்து இருந்தனர் . நான் பஸ்சின் கிளினரிடம் சொல்லி அவன் வந்து சொன்ன பிறகும் வேண்டா வெறுப்புடன் ஒருவன் எழுந்து போனான் அனால் அந்த குண்டு கொழக்கட்டை யோ வேண்டும் என்று இரண்டு சீட்டையும் அடைத்து கொண்டு உட்கார்ந்து இருந்தான் .

அவர்களில் பெருபாலானவர்கள் அரை டிராயர் டி ஷர்ட் என எதோ கபடிவிளையாட வந்தவர்களைப் போன்று இருந்தனர். எனக்கு அந்த குண்டனின் பக்கத்தில் உட்கார விருப்பமே இல்லாததால் திரும்ப வந்து விட்டேன் . இதை விட கொடுமை தனியாக வந்த ஒரு பெண்ணும் என்ன செய்வது என்று உட்கார மனமில்லாமல் இருந்தார் . நான் அடுத்த பஸ்ஸில் செல்வதாக சொன்னதும் அவரும் அடுத்த பஸ்ஸில் வந்தார்.

அந்த சிங்களவர்கள் அந்த பெண் உட்கார கொஞ்சம் கூட இடம் தராமல் , அதாவது முன் சீட்டை விட்டு எழுந்து போக வேண்டும் . ஆனால் நாங்கள் குருப்பாக வந்துள்ளோம் இல்லாவிட்டால் நாங்கள் வேறு பஸ்ஸில் போகிறோம் என்று கூறி கொண்டிருந்தனர்.

நான் முதலில் அவர்களை வட நாட்டவர் பீகார் போன்ற மாநிலத்தில் இருந்து வந்து இருக்கலாம் என்று தான் எண்ணினேன் கீழே இறங்கி வந்த போது தான் சொன்னார்கள் அவர்கள் சிங்களவர்கள் என்று.

தமிழகத்திலேயே இத்தனை ஆட்டம் போடும் இந்த காட்டு மிராண்டிகள் இலங்கையில் எப்படி நடந்து கொள்வார்கள் என நினைத்து கொண்டேன். தமிழகத்தில் கூட என உரிமையை நிலை நாட்ட முடிய வில்லை .

இலங்கையில் .....???


.....

Tuesday, January 5, 2010

மணிரத்னம் ஒரு மகத்தான இயக்குனர்


நாலு பாட்டு , ஐந்து சண்டை அப்புறம் கொஞ்சம் காமடி என்று போய்கொண்டிருக்காமல் தன்னுடைய இயக்குனர் பாதையை சிறப்பாக அமைத்து கொண்ட இயக்குனர்களுள் எனக்கு மிகவும் பிடித்தவர் இந்த மணியானவர் .
அவருடைய படங்களில் மௌன ராகம் , நாயகன் , தளபதி (கொஞ்சம் கமஷியல் கலந்தாலும்) ரோஜா , பாம்பே , கன்னத்தில் முத்தமிட்டால் ... போன்றவே அவரை உலக அளவில் மிக சிறந்த இயக்குனர்களுள் ஒன்றாக மாற்றி விட்டது எனலாம்.

அவர் கதையை கையாளும் விதத்தில் ஒரு மென்மையும் இருப்பதால்தான் ராம் கோபால் வர்மாவை விட கொஞ்சம் மேலே இருப்பதாக தெரிகிறது. அவர் படத்தின் நாயகன் , நாயகிகள் உடைகள் அவர்களின் பாத்திர படைப்புகளுக்கு மிக சரியாக இருப்பதும் அவரின் வெற்றிக்கான காரணங்களுள் ஒன்று எனலாம்.

அதேப்போல் இளைய ராஜாவின் பாடல்களுக்கு அவரின் காட்சியமைப்பு அதையொரு கவிதையாக்கி விடுவதை காணலாம்.

மணிரத்தினம் அவர்களின் படங்களை இனி வரும் பதிவுகளில் நான் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.

பழைய சோறுதான் கொஞ்சம் சூடு படுத்தி தருகிறேன்.

வாங்கோன்னா... அட .. வாங்கோன்னா