Saturday, July 10, 2010

நன்றி கெட்டவர்கள்


ரோட்டில் பார்க்கும் எல்லா மரத்தின் பெயரையும் உங்களால் சொல்ல முடிந்தால் நீங்கள் ஒரு அறிவு ஜீவி என முதுகில் தட்டி கொள்ளலாம் .

மா மரம், கொய்யா , புளிய மரம் , ஆல மரம் ,அரச மரம் , வேப்ப மரம் என ஒரு சில மரங்களின் பெயர்களே எனக்கு தெரியும் என்பதால் நான் உங்களைப்போன்று அறிவு ஜீவி அல்ல . ஒரு சாதாரண ஜீவிதான் .

எல்லா மரங்களின் பெயரையும் தெரிந்து வைத்து கொள்ளும் அவசியம் எனக்கு இதுவரை வந்ததில்லை . ஆனால் நான் எந்த மரத்தை பற்றி எழுதுகிறேன் என்பதே தெரியாமல் எழுதி கொண்டு இருப்பதால் இப்போது அந்த அவசியம் வந்து இருக்கிறது .

அது ஒரு பெயரில்லாதா அல்லது பெயர் தெரியாத மரம் .
அரச மரத்தின் இலைகளைப்போன்றுதான் அதன் இலைகளும்.
ஆனால் பச்சை கொஞ்சம் அதிகம் .
அரச மரத்தின் இலை கிளிபச்சை என்றால் இதன் இலை கொஞ்சம் கரும் பச்சை .
அரச இலை இரண்டு பக்கமும் நன்கு வளைந்து அப்புறம் நன்கு குறுகி முடியும் . ஆனால் இந்த மரத்தின் இலை அரச இலையைவிட ஒரு முப்பது சதவிதம் குறைவாய் வளைந்து இருக்கும்.
இலை முடிவது அரச இலையை போலா ரொம்பவும் குறுகி முடிந்திருக்காது . கொஞ்சமே குறுகி காணப்படும் .

தி.நகரில் நான் வேலை செய்யும் நிறுவனம் இருக்கும் தெருவில் ஒரு ஐந்து வருடங்களாக இதை நான் பார்த்து கொண்டு இருக்கிறேன் .
ஆனால் இது என்ன மரம் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் எனக்கு வந்ததே இல்லை .

அந்த மரத்தின் நிழலில் நின்று எத்தனையோ முறை நண்பர்களிடம் பேசி கொண்டு இருந்திருக்கேன் .
அதன் நிழலில் எத்தனையோ முறை என்னுடைய பைக்கை நிறுத்தி வைத்து இருந்திருக்கின்றேன் .
ஆனால் ஒரு முறை கூட அந்த மரத்தை பற்றி நினைத்து பார்த்ததே இல்லை .

நான் மட்டும் இல்லை எத்தனையோ ஆயிர கணக்கானவர்கள் அந்த பெயர் தெரியாத மரத்தின் கீழ் இருந்து பேசி இருந்திருக்கின்றார்கள் .
வண்டியை நிறுத்தி இருக்கின்றார்கள் .
இரவில் அங்கு ஒரு கையேந்தி பவனையும் பார்த்து இருக்கின்றேன்.

இந்த மரத்தின் சேவையை பயன்படுத்தி கொண்டது நான் மட்டும் அல்ல.
அதற்கு பின்னால் உருவான ஒரு பல மாடி கட்டிடமும் தான்.
அந்த கட்டிடம் கட்ட பட்ட போது அதற்கு தேவைப்படும் கம்பிகளை வெட்டியதும் இந்த மரத்தின் நிழலில்தான் .
கட்டிட வேலை செய்பவர்கள் ஓய்வாய் உட்கார்ந்து இருந்ததும் இந்த மரத்தின் நிழலில்தான் .
கட்டிடம் கட்டுபவரின் கப்பல் போன்ற கார் நின்றதும் இந்த மரத்தின் நிழலில்தான்.

இன்று அந்த கட்டிடம் பல மாடிகளோடு எழும்பி நிற்கிறது .
அந்த கட்டிட உரிமையாளர் கம்பீரமாய் அதனை பார்த்து கொண்டு இருக்கின்றார் .

ஆனால் அந்த பெயரில்லாத மரமோ இப்போது வெட்டப்பட்டு கிடக்கின்றது .
கட்டிடத்தின் அழகை கெடுக்கிறது என்று .


.....முற்றும் .

வாங்கோன்னா... அட .. வாங்கோன்னா